பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு ‘பிரஹார்’ என்ற பெயரில் தேசிய கொள்கையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட இந்த கொள்கை, முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள், நிதி மற்றும் ஆயுத ஆதாரங்களை ஒடுக்குதல் போன்ற அம்சங்களை தெளிவாக விளக்குகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த கொள்கையில், ஏழு முக்கிய துறைகள் அடிப்படையாக வரையறுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது, தேவையான இடங்களில் திடீர் பதிலடி அளிப்பது, அரசு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படி செயல்படுவது, பயங்கரவாத நிதி ஆதாரங்களை முற்றிலும் அழிப்பது, சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் பயங்கரவாத வலையமைப்புகளை ஒடுக்குவது, சமூக ஒத்துழைப்புடன் துணிச்சலான நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
‘பிரஹார்’ என்ற பெயருக்கான விளக்கத்துடன், ஒவ்வொரு எழுத்திற்கும் தொடர்பான கொள்கை நோக்கங்களையும் அரசு எடுத்துரைத்துள்ளது. அண்டை நாடுகளில் உள்ள ஆளுமை இல்லாத பகுதிகள், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு தளமாக பயன்படுத்தப்படுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை மதம், இனம் அல்லது கலாசார அடையாளங்களுடன் இணைக்க முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்த கொள்கை வலியுறுத்துகிறது. எல்லை கடந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள், ‘ஸ்லீப்பர் செல்கள்’ வழியாக வன்முறையை தூண்டும் முயற்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக நிதி திரட்டல் ஆகிய சவால்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயங்கரவாத சதித்திட்டங்களை முறியடிக்க நவீன தொழில்நுட்பங்கள், சைபர் கண்காணிப்பு, பன்முக முகமைகள் ஒருங்கிணைப்பு ஆகியவை வலுப்படுத்தப்பட உள்ளன. மத்திய மற்றும் மாநில அமைப்புகளுக்கிடையே நிகழ்நேர தகவல் பரிமாற்றம் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்தி இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சிகளை தடுக்க, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவிகளை வழங்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
