பதவியேற்ற மூன்று மாதங்களில் பார்லியை கலைத்த ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி
டோக்கியோ:
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, 64, பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே நாட்டின் பார்லியை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்லி தேர்தல் நடைபெறுவது வழக்கம். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், லிபரல் ஜனநாயக கட்சி (எல்.டி.பி.) சார்பில் புமியோ கிஷிடா வெற்றி பெற்று பிரதமரானார்.
கூட்டணி கட்சி
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2024 ஆகஸ்டில் புமியோ கிஷிடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, 2024 செப்டம்பரில் ஷிகேரு இஷிபா பிரதமராக பொறுப்பேற்றார். பின்னர் அவர், அதே ஆண்டு அக்டோபரில் பார்லி தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
இந்த தேர்தலில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல்.டி.பி. கட்சி கடும் பின்னடைவை சந்தித்தது. ஜப்பான் பார்லியில் மொத்தம் 465 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மை பெற 233 இடங்கள் தேவை. ஆனால், எல்.டி.பி. மற்றும் அதன் கூட்டணி கட்சியான கொமெய்டோ இணைந்து 215 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
2021 தேர்தலில் 259 இடங்களை கைப்பற்றிய எல்.டி.பி., 2024 தேர்தலில் 191 இடங்களாக சுருங்கியது. அதேபோல், கொமெய்டோ கட்சியின் பலமும் 32 இடங்களில் இருந்து 24 ஆக குறைந்தது.
பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், எல்.டி.பி. கட்சியின் பல உறுப்பினர்கள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
இதன் பின்னணியில், பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஷிகேரு இஷிபா பதவியேற்ற ஓராண்டுக்குள் பதவி விலகினார். அதன் பின், 2025 அக்டோபரில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகாய்ச்சி பிரதமராக பொறுப்பேற்றார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகாய்ச்சிக்கு, மக்களிடையே சுமார் 70 சதவீத ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆதரவை பயன்படுத்தி, ஆளுங்கட்சியின் பலத்தை அதிகரிக்க அவர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைப்பு
இந்த சூழலில், ஜப்பான் பார்லியை கலைத்து பிரதமர் சனே தகாய்ச்சி நேற்று உத்தரவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்ற அவர், மூன்று மாதங்களிலேயே இந்த முடிவை எடுத்துள்ளார். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பார்லி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகாய்ச்சி தலைமையிலான ஆளும் கட்சியை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘மத்திய சீர்திருத்த கூட்டணி’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளன.
2024 அக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், அரசியல் மாற்றங்கள் காரணமாக வெறும் 15 மாதங்களுக்குள் ஜப்பான் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
