சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 12வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12வது நாளாக, 600க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் டி.பி.ஐ. அலுவலகம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று, 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றி, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலக் குழுவினர், தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
நல்ல அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
