சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: திமுக அரசை சிலர் திராவிட மாடல் நிர்வாகம் என புகழ்ந்தாலும், அதனை ஏமாற்று மாடல் அரசு என நாங்கள் கருதுகிறோம்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி, பல மாதங்கள் வழங்காதது குறித்து மக்களிடம் எடுத்துரைக்கிறோம். 5 ஆண்டுகளில் நடந்த பொங்கல் பண்டிகைகளில் அனைத்திலும் நிதி வழங்கப்படவில்லை. திடீரென கோடைகால சிறப்பு நிதி அறிவிப்பது அரசின் விருப்பம் தான்; ஆனால் அதனை மத்திய அரசு தடுக்க முயல்கிறது என கூறுவதை நான் விமர்சிக்கிறேன். பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என நினைப்பது தவறு.
தேர்தலுக்கு முன் நிதி வழங்கியவர்களின் தோல்விக்கு ஜெகன் மோகன், சந்திரசேகர ராவ் ஆகியோர் உதாரணம். தவெக ஒரு சக்தி என்பதை மறுப்பதில்லை. குறுகிய காலத்தில் தொண்டர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், விஜய் களத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். கரூர் உள்ளிட்ட விவகாரங்களை மேலும் சிறப்பாக கையாள முடிந்திருக்கலாம்.
தமிழக அரசியலில் புதியவர்கள் தேவை. விஜய் அதிக ஓட்டுகள் பெறும் நாள் வரும்; ஆனால் தற்போதைய சூழலில் இதனை மூன்று முனை போட்டியாக நான் கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
