திருச்சி: திருச்சியில் வரும் மார்ச் 11ல் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். கூட்டம் நடத்துவதற்காக மாத்தூர், பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர் உள்ளிட்ட மூன்று இடங்களை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், போலீஸ் விசாரணையில் மரணங்கள், கொலைகள், ரவுடியிசம் போன்ற காரணங்களால் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. திமுக கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
கடந்த 2021 தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் திமுக பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. தற்போது இருக்கும் கூட்டணி, 2021 தேர்தலிலேயே இப்படியே இருந்திருந்தால், 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். பணப்பெட்டியை வாங்கிக் கொண்டே திமுக கூட்டணியில் பலரும் சேர்ந்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு அனைத்து நிதிகளையும் முறையாக வழங்குகிறது. ஆனால், நிதியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு தரவில்லை என மாநில அரசு பொய் கூறுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு வேறு துறைகளுக்கு மாற்றி பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
