‘பகவத் கீதையை மதத்திற்குள் அடக்க முடியாது; அது ஒரு நீதி நெறி புத்தகம்’ மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து
மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், பகவத் கீதை ஒரு மத நூல் மட்டுமல்ல; அது வாழ்வியல் நெறியையும் சமூக நீதி காக்கும் கொள்கைகளையும் போதிக்கும் நூல் எனத் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க மாநில அரசு எடுத்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, இந்தக் கருத்தை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
வரும் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து, கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் மக்கள்தொடர்பாளர் ஆனந்த் முட்டங்கல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பகவத் கீதை ஒரு மத நூல் எனவும், பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டுமெனில் பிற மத நூல்களும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் வாதிட்டிருந்தார். மனுதாரர் சார்பில் ராஜேஷ் சந்திரா என்ற வழக்குரைஞர் ஆஜரானார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அஜித் சிங் மற்றும் சஞ்சய் யாதவ் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. முந்தைய விசாரணையின் போது, மனுதாரரின் வழக்குரைஞரை பகவத் கீதை படித்துவிட்டு வருமாறு நீதிபதிகள் அறிவுறுத்தி, அதற்காக இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், பகவத் கீதையை வாசித்தாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேஷ் சந்திரா, தாம் கீதையைப் படித்ததாகவும், ஆனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்றும், அது வாழும் நெறியாகவும், நன்னெறி மற்றும் சமூக நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நூலாகவும் இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
