நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது அவமதிப்பு அல்ல; அமைச்சர் ரகுபதி தெளிவுபடுத்தல்
புதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக தாம் பேசிய கருத்துகளில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
❖ சட்டப்படி பேசினேன்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “நான் நேற்று கூறிய கருத்துகளில் நீதிமன்ற அவமதிப்பு என்ற எந்த அம்சமும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்ட வகையில்தான் பேசினேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் திமுகவுக்கு எப்போதும் இல்லை” என கூறினார்.
❖ ஆதாரம் காட்ட வேண்டிய பொறுப்பு
மேலும் அவர் கூறுகையில், “ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டால், அந்த வழக்கை தொடர்ந்தவர்கள் தான் தங்கள் கோரிக்கையை நிரூபிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கல் தூணில் முன்பு தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதா என்று தான் நாங்கள் கேட்கிறோம். அரசே நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
❖ உச்ச நீதிமன்றத்தில் வாதம்
“நான் கூறியவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட உள்ள சட்ட ரீதியான வாதங்களே. நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. எந்த சூழ்நிலையிலும் நீதிமன்றத்தின் மரியாதையை காக்கிறோம்” என அமைச்சர் ரகுபதி விளக்கினார்.
❖ உதாரணம் தான் சொன்னேன்
“நீதிபதிகள் அரசு பேய் கதைகள் சொல்கிறது என்று கூறும் போது, நான் ஒரு உதாரணமாக ‘சுடுகாட்டில் தான் பிணம் எரிக்க வேண்டும்; நடுரோட்டில் எரிக்கக் கூடாது’ என்று சொன்னேன். இதில் என்ன அநாகரிகம் உள்ளது? இது நீதிமன்ற அவமதிப்பாக எப்படி மாறும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
❖ தீர்ப்புக்கு கட்டுப்படுவோம்
மேலும் அவர் கூறுகையில், “இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே இந்த விவகாரம் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. சட்ட ரீதியாக எங்களிடம் பல வாதங்கள் உள்ளன. தற்போதைய தீர்ப்புக்கு கட்டுப்படுவோம். அதே நேரத்தில், கார்த்திகை தீபத்திற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
