திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கு ஏற்றும் விவகாரத்தில், நீதியை நிலைநாட்ட தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என, அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கு ஏற்றும் விவகாரத்தில், இது நீதிமன்ற அவமதிப்பு என்பது தெரிந்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்நோக்கத்துடன் செயல்பட்ட மதுரை கலெக்டர், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர், நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதித்துள்ளனர்.
ஆனால், தற்போது, ‘நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை’ என மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்திருப்பது, நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். இவர்கள் அப்பீல் செய்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., மற்றும் இண்டி கூட்டணி கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு, தூண்டுகோலாக இருந்தவர்களும் இவர்களே. நீதிபதி சுவாமிநாதனை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவதூறு பரப்பி நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு அளித்ததும் இவர்கள்தான்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல், பெருமாள் கோவில் பட்டியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்திலும், 144 தடை உத்தரவை கலெக்டரும், போலீசாரும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும்.
மன்னிப்பு கேட்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். ‘சட்டம் என்ன செய்யும்’ என்பதை தெரிந்தே தவறு செய்துள்ளனர். ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, ஆதாயத்திற்காக இந்த குற்றத்தை செய்துள்ளனர். அதற்கேற்ப தண்டனையை வழங்குவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
வரும் காலங்களில், நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாமல், இதே உத்தியை அதிகாரிகள் பின்பற்றுவதற்கு நீதிமன்றம் இடம் அளிக்கக் கூடாது. மக்களுக்கு நீதி கிடைக்கும் இடம் நீதிமன்றங்களே. அப்படி கிடைத்த நீதியை அமல்படுத்தாமல் தடுக்கும் அதிகாரிகளையும் அரசையும் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
