புதுடில்லி: சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற நீதித்துறை தொடர்பான உள்ளடக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, என்சிஇஆர்டி மன்னிப்பு கோரி அந்தப் பாடத்தை திரும்பப் பெற்றுள்ளது.
“Exploring Society: India and Beyond – 2” என்ற புத்தகம் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், “நமது நீதித்துறையில் சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் இடம்பெற்ற சில பகுதிகள் பொருத்தமற்றதாக இருப்பது கவனத்திற்கு வந்ததாக என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் புத்தக விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறையின் மீது உயர்ந்த மரியாதையும் நம்பிக்கையும் இருப்பதாக கூறிய என்சிஇஆர்டி, இந்த பிழை தற்செயலாக இடம்பெற்றது என விளக்கம் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட எந்த அமைப்பையும் குறைத்து மதிப்பிடும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முறைப்படி ஆலோசனை நடத்தி, சர்ச்சைக்குரிய பாடப்பகுதி மீண்டும் எழுதப்படும் என்றும், ஏற்பட்ட தவறுக்கு மீண்டும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
