புதுடில்லி: என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விவாதம் எழுந்தது. இதற்கு தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
நீதிமன்றம் கூடியபோது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த விவகாரத்தை முன்வைத்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறையில் ஊழல் குறித்து கற்பிப்பது கவலைக்குரியது என கூறினார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த முயற்சியும் அனுமதிக்கப்படமாட்டாது என்றார். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் தன் கடமையை நிறைவேற்றுவேன் என்றும், இது திட்டமிட்ட நடவடிக்கை போல தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
