நிர்வாகத் தோல்வியை மறைக்க காவல்துறையை பயன்படுத்தும் திமுக அரசு: அண்ணாமலை கடும் கண்டனம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க காவல்துறையை பயன்படுத்தி ஆசிரியர்களை அச்சுறுத்தி வருகிறார் என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஏழு பேரின் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்குவோம் என திமுக அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், தற்போது தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க காவல்துறையை ஏவி ஆசிரியர்களை மிரட்டி வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்து அவர்களின் குரலை அடக்கலாம் என நினைப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் தளர்ந்து போய்விடும் என்ற திமுகவின் எண்ணம், ஜனநாயகத்தை அந்த அரசு எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறது என்பதற்கான சாட்சியெனவும் விமர்சித்தார்.
உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்திய அண்ணாமலை, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவுகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
