திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கிடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, உள்ளூர் வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சொந்த மண்ணில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அபிஷேக் ஷர்மாவும் 30 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் சிக்சர் மழையை பொழிந்தனர்.
நியூசிலாந்து வீரர் சோதி வீசிய 12வது ஓவரில் 2 சிக்சர்கள் உள்பட 29 ரன்னை இஷான் கிஷான் விளாசினார். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 26 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 42 பந்துகளில் சதம் அடித்தார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இந்திய வீரர் விளாசிய அதிவேக சதமாகவும் இது அமைந்தது. இஷான் கிஷான் 103 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் சிக்சர் மழையை தொடர்ந்தார். அவர் 17 பந்துகளில் 42 ரன் குவித்து அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 169 ரன் குவிக்கப்பட்டது. இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 245 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியில் செய்பெர்ட் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், ஆலன் அதிரடியாக விளையாடினார். இந்திய பந்துவீச்சாளர்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினார். இதனால் அந்த அணி 9 ஓவர்களில் 117 ரன் எட்டியது. அப்போது 38 பந்துகளில் 80 ரன் விளாசிய செய்பெர்ட், அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.
இதனால் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 225 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரிங்கு சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
36 சிக்ஸர்கள்:
இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 36 சிக்ஸர்கள் அடித்துள்ளன.
