இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கான நிதியுதவியை பெறுவதற்காக பிற நாடுகளுக்கு சென்று உதவி கேட்டதை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னணி வணிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அப்போது, பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு தற்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகையில் பெரும்பங்கு கடன்களே என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தலை குனிந்து உதவி கேட்டோம்”
நிதி திரட்டுவதற்காக உலகம் முழுவதும் சுற்றி வந்த அனுபவம் வெட்கமளிப்பதாக இருந்ததாக ஷாபாஸ் ஷரீஃப் கூறினார்.
“கடன் வாங்குவதற்காக சென்று தலை குனிந்து நின்றோம். அது நாட்டின் சுயமரியாதைக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. இந்த நிலை எங்களுக்கே வெட்கமாக இருக்கிறது,” என அவர் தெரிவித்தார்.
ராணுவத் தளபதி உடன் பயணம்
தான் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் உடனும் சேர்ந்து பல நாடுகளுக்கு சென்று நிதியுதவி கோரியதாகவும், அந்த அனுபவம் மனதை பாரமாக்கியதாகவும் அவர் கூறினார்.
ஐஎம்எஃப் பேச்சுவார்த்தை
நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்ட கடுமையான கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் பாகிஸ்தான் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
