கிரேட்டர் நொய்டா: வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு நம் நாட்டில் தயாரிக்கப்படும் சிப்கள் மிக அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை, இந்தியாவின் ஹச்சிஎல் குழுமம் மற்றும் தைவானின் பாக்ஸ்கான் நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாக அமைகிறது. இதற்காக “இந்தியா சிப் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.3,700 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது.
மாதத்திற்கு 20,000 சிலிக்கான் வேபர்களை கையாளும் திறன் கொண்ட இந்த ஆலை, மாதம் 3.6 கோடி சிப்களை உற்பத்தி செய்யும். மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் பயன்படும் டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் இங்கு தயாரிக்கப்படும்.
இந்த திட்டம், செமிகண்டக்டர் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கும். மேலும், உத்தரபிரதேசத்தின் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்தியா செமிகண்டக்டர் துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இந்த ஆலை முக்கிய மைல்கல்லாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
