புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தான நபராக ராகுல் உருவெடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய கிரண் ரிஜிஜூ, ராகுல் பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்றும், பார்லிமென்ட் வெளியே மக்களை துரோகிகள் என கூறுவது உள்ளிட்ட செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்தார்.
அவையில் போராட்டம் நடத்துவது, வெளியிடப்படாத புத்தகத்தை படிக்க வேண்டும் என வலியுறுத்துவது போன்ற செயல்களை அவர் விமர்சித்தார். இந்திய வரலாற்றில் இதுபோன்ற எதிர்க்கட்சித் தலைவரை பார்த்ததே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், எந்த சந்திப்புகளுக்கும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார். ஆதாரமின்றி பிரதமரின் பெயரை இழுப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்களுடன் ராகுல் தொடர்பில் இருப்பதாகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நக்சலைட்டுகள் மற்றும் குறிப்பிட்ட சித்தாந்தவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
பார்லிமென்ட் செயல்பாடுகளை முடக்கும் விதமாக காகிதங்கள் வீசுதல், பதாகைகள் ஏந்துதல் போன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் பெரும்பாலும் ஈடுபடுகிறது என்றும், இதனால் சிறிய எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேசும் நேரத்தை இழக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய விதத்தையும் அவர் விமர்சித்தார். சபாநாயகர் ஓம் பிர்லா மிகுந்த பொறுமையுடன் நடந்துகொண்டார் என்றும், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இருந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பார் என்றும் கூறினார்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அனுபவமிக்க தலைவர்கள் இருந்தனர் என்றும், தற்போது கட்சி மெல்ல மெல்ல ராகுலைப் போல மாறிவிட்டதாகவும் கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் தோல்விகள் இருந்தபோதும் அதே தலைமையுடன் கட்சி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
