திருப்பூர்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட 6 வங்கதேசத்தினர், நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக டில்லி போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலத்தினர் போர்வையில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையிலும் டில்லியில் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் திருப்பூரில் வசித்த வங்கதேசத்தினர் தொடர்பில் இருந்ததாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை திருப்பூரில் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. அம்மாபாளையம், பல்லடம் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் சோதனை நடத்தி, ஆறு பேரை போலீசார் பிடித்தனர்.
பிடிபட்டவர்களை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டில்லி போலீசார் அவர்களை அழைத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட மிஜனூர் ரகுமான் (33), முகமது சாபேட் (35), உமர் (32), முகமது லிட்டன் (40), முகமது ஜாகீத் (40), முகமது உஜால் (29) ஆகியோரின் மொபைல் போன்கள் மற்றும் போலியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட இந்திய ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் பயங்கரவாதத் திட்டம் கோணத்தில் டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
