நந்தனம் அரசு கல்லூரி கேன்டீனில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்முறை: 3 பேர் கைது
சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேன்டீனில் பணியாற்றி வந்த 20 வயது இளம்பெண்ணை, கேன்டீன் உரிமையாளர் மற்றும் அவரது நெருங்கியவர்கள் மிரட்டி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், திருமணமான நான்கு மாதங்களில் கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்த நிலையில், கும்பகோணத்தில் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அறிமுகம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், தேனாம்பேட்டையைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்பவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டு, நந்தனம் அரசு கல்லூரியில் அவர் நடத்தி வந்த கேன்டீனில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
பெண்ணின் குடும்ப சூழல் மற்றும் பொருளாதார நிலையை பயன்படுத்திக் கொண்ட முத்துச்செல்வம், அவரது வீட்டிலும், கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறை, கேன்டீன் உள்ளிட்ட இடங்களிலும் மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் உயிர் பயத்தில் அந்த பெண் பேச முடியாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, முத்துச்செல்வம் தனது நண்பர் கார்த்திகேயனுக்கும் அந்த பெண்ணை ஒப்படைத்ததாகவும், பின்னர் கேன்டீன் சமையல் மாஸ்டரான குணசேகரனும் மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை தப்பிக்க முயன்றும் முடியாத நிலையில், ஒரு கட்டத்தில் பிடியில் இருந்து தப்பிய அந்த பெண் சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சமூக நலத்துறை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, முத்துச்செல்வம், கார்த்திகேயன், குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தாயின் ஏழ்மை காரணமாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
