“நடிகர் தான்; அரசியல்வாதி இல்லை” – விஜயை சாடிய இபிஎஸ்
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், நடிகர் விஜயின் அரசியல் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். கரூரில் நடந்த துயர சம்பவத்தை குறிப்பிட்டு, விஜயை பார்க்க வந்ததால் 41 பேர் உயிரிழந்ததாகவும், அத்தகைய பேரிழப்புக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல விஜய் வரவில்லை என்றும் அவர் கூறினார். விஜய் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் அரசியல்வாதி என்றால் மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் நிற்க வேண்டும் என்றார்.
அரசியல் குறித்து தொடர்ந்துப் பேசிய இபிஎஸ், கொரோனா காலகட்டத்தில் விஜய் மக்களை சந்திக்க வெளியே வந்திருப்பாரா என்ற கேள்வியையும் எழுப்பினார். யாரையும் தனிப்பட்ட முறையில் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், அரசியல் பொறுப்பை உணர வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ் விவகாரம் குறித்து பேசுகையில், அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், இது பொதுச்செயலாளரின் தனிப்பட்ட முடிவு அல்ல; 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து எடுத்த தீர்மானம் என்றும் இபிஎஸ் விளக்கம் அளித்தார்.
எதிர்வரும் சட்டசபை தேர்தலை குறித்து பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என உறுதியுடன் தெரிவித்தார். தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்துவருவதாகவும், அனைத்தும் இறுதி செய்யப்பட்ட பிறகு கூட்டணி விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்கு முன்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் செய்து அரசு ஊழியர்களை ஏமாற்றியதாகவும், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
