புதுடில்லி: வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் விடுத்த அழைப்பை இந்தியா ஏற்க மறுத்ததாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: வர்த்தகம், கலாசார பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு நிலவுகிறது. இருதரப்பு உறவுகளின் இந்த அம்சங்கள் தொடர்ந்து வளர்ச்சியடையும்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாக கூறப்படும் வீடியோவை பார்க்கவில்லை. அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2025ம் ஆண்டு டில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தொடர்பு குறித்து கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்த கருத்துகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் பார்வையாளர்களை அனுப்புமாறு வங்கதேசம் அழைப்பு விடுத்தது. ஆனால் வங்கதேச தேர்தலைக் கண்காணிக்க இந்தியா எந்தக் குழுவையும் அனுப்பவில்லை.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிப்ரவரி 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் டில்லியில் நடைபெறும் 2வது ஏஐ உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிப்ரவரி 21ம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி அவருக்கு விருந்து அளிக்கிறார். துணை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களையும் பிரேசில் அதிபர் சந்திக்கிறார்.
