தேர்தல் ஆதாயத்திற்காக மஹாத்மா காந்தி பெயரை பயன்படுத்தியது காங்கிரஸ்: சிவராஜ் சவுகான்
புதுடில்லி:
தேர்தல் ஆதாயத்திற்காக மஹாத்மா காந்தியின் பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும், தற்போது காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரசின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் சார்ந்தவை என்றும், அதில் எந்த நோக்கமோ, கொள்கையோ இல்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் லாபத்திற்காக மஹாத்மா காந்தியின் பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியதாகவும், மஹாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பட்ஜெட்டை குறைத்ததும், ஊதியத்தை முடக்கியதும் காங்கிரஸ் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இன்று அதே விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் கூறினார்.
இன்றைய சூழலில் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் பணம் தொழிலாளர்களை நேரடியாக சென்றடைவதை உறுதி செய்யும் நிலையில், காங்கிரஸ் அதனை தாக்குதலாகக் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் முடிவுகள் இனி டில்லியில் அல்ல, கிராமங்களில் எடுக்கப்படும் என்றும், கிராம பஞ்சாயத்துகள் ஒன்றாக அமர்ந்து தங்களது சொந்தத் திட்டங்களை வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் வேலைவாய்ப்பைக் குறைக்கவில்லை; மாறாக அதை வலுப்படுத்துகிறது என்றும் சிவராஜ் சிங் சவுகான் விளக்கினார். வேலைவாய்ப்பு நாட்கள் 100 இலிருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஊதிய வழங்கலில் தாமதம் ஏற்பட்டால் கூடுதல் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வேலைவாய்ப்பு பாதுகாப்பு குறையவில்லை; அதிகரித்துள்ளது என்பதும் தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
கிராம சபை மற்றும் பஞ்சாயத்துகளின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்படவில்லை; மாறாக அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். வி.பி., ஜி ராம் ஜி திட்டம் இந்தியாவின் எதிர்காலம் என்றும், அதிகாரம் பெற்ற கிராமங்கள் மற்றும் மரியாதைக்குரிய தொழிலாளர்கள் என்பதே அதன் குறிக்கோள் என்றும் தெரிவித்தார். கிராம சுயாட்சி மற்றும் சுயசார்பு எங்கள் உறுதிப்பாடு என்றும், கிராமம் சார்ந்த வளர்ச்சி எங்கள் தொலைநோக்குப் பார்வை என்றும் கூறிய அவர், உழைப்புக்கு மரியாதை அளிப்பதே எங்கள் நோக்கம்; சமூகப் பொறுப்புணர்வே எங்கள் குறிக்கோள் என்றும் கூறினார்.
இவ்வாறு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
