புதுடில்லி: உயர் நீதிமன்றங்கள் வழக்குகளில் தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து, நீண்ட காலம் தீர்ப்பு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பு அறிவித்த நிலையில், அந்த தீர்ப்பு இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்படவில்லை என்றும் கூறி, தீர்ப்பை வெளியிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி, விபின் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “யாரையும் தனிப்பட்ட முறையில் குறைகூறவில்லை. ஆனால், இத்தகைய தாமதம் நீதித்துறையின் முன் உள்ள ஒரு சவாலாக உள்ளது. இது அடையாளம் காணக்கூடிய ஒரு நோயாக மாறியுள்ளது. நீதிக்காக காத்திருப்பவர்களின் நலன்களுக்கு எதிராக இந்த நிலை மேலும் பரவுவதை அனுமதிக்க முடியாது,” எனக் குறிப்பிட்டனர்.
இந்த குறிப்பிட்ட வழக்கில், அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், 2025ஆம் ஆண்டில் தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட தேதிகள், தீர்ப்புகள் எப்போது அறிவிக்கப்பட்டன, அவை எப்போது இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பதற்கான விவரங்களை அனைத்து உயர் நீதிமன்றங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றங்கள் வழங்கும் இந்த அறிக்கைகளின் அடிப்படையில், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
