தூய்மை பணியாளர்களுக்கு உணவு நாடகம் வேண்டாம்; நியாயமான ஊதிய உயர்வு வழங்குங்கள் – அண்ணாமலை
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்குவது போல விளம்பர நாடகம் நடத்துவதை கைவிட்டு, அவர்களுக்கு உரிய நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முழுவதும் தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராடியபோது, அவர்களின் கோரிக்கையை ஏற்காமல், கூடுதல் ஊதியத்திற்கு பதிலாக உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் முதல்வர் விளம்பர நாடகம் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் குப்பை அள்ளும் வாகனத்திலேயே தூய்மை பணியாளர்களுக்கான உணவு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம், அவர்களை அவமானப்படுத்தும் செயல் என தெரிவித்துள்ளார்.
மேலும், திருநெல்வேலியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததுடன், அந்த உணவை உட்கொண்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார். தரமற்ற உணவையே வழங்குவதுடன், நீண்ட நேரம் காத்திருக்க வைத்த பிறகே உணவு வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நியாயமான ஊதிய உயர்வு வழங்காமல், தரமற்ற உணவை கொடுத்து தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை காயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு, பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தரமான உணவைக் கூட வழங்க முடியாவிட்டால், எதற்காக இத்தனை விளம்பரங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தூய்மை பணியாளர்கள் உணவுக்காக அரசிடம் கையேந்தவில்லை; அவர்கள் கேட்டது நியாயமான ஊதிய உயர்வே என்றும், உடனடியாக தரமற்ற உணவு வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உணவு வழங்கும் விளம்பர நாடகத்தை நிறுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
