மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவின் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுரை கலெக்டர் பிரவின் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிரி வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என்றார். ஹிந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்கள் தீபம் ஏற்ற வருகையில் அதிகமானோர் கூடினர் என்றும், சிலர் பிரச்னையில் ஈடுபட்டதாகவும் கூறினார். உளவுத்துறை தகவலின் அடிப்படையில் சட்டம்–ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக தீபம் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் விளக்கினார்.
நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், உத்தரவை நிறைவேற்ற முடியாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். இச்சூழ்நிலையை விளக்கி வருத்தம் தெரிவித்து, கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவிடுகையில், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மற்றும் கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதிலிருந்து விலக்களிப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணைகளில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கலெக்டர் பிரவின் குமார் மார்ச் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், டேவிட்சன் தேவாசீர்வாதம்-ஐ இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோருவது தேவையற்றது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
