மதுரை: தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்குள் கூட ஊழல் செய்வதில் போட்டி நிலவுகிறது என்றும், இவ்வாறான ஊழல் அரசுக்கு தொடர எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “வெற்றிவேல், வெற்றிவேல்” என்ற முழக்கத்துடன் தனது பேச்சை தொடங்கினார்.
அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை வணங்கி பேச்சை தொடங்கிய அவர், பாண்டிய நாட்டின் வீர வரலாற்றையும் நினைவுகூர்ந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரன் உள்ளிட்ட தலைவர்களை அவர் நினைவு கூர்ந்தார்.
தமிழகத்தில் மாற்றம் தேவை என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்றும், அடுத்த அரசு தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு தான் என்ற நம்பிக்கை மக்களிடையே இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஏழைகளுக்காக தி.மு.க. அரசு செயல்படவில்லை என்றும், மற்றவர்களும் பணியாற்ற விடாமல் தடைக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றாலும், இன்னும் மூன்று லட்சம் வீடுகள் நிறைவேறாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
2004 முதல் 2014 வரை மத்தியிலும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது தமிழகத்திற்கு போதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். தற்போது பாம்பன் புதிய ரயில் பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ரயில்வே துறைக்கான தமிழக நிதி ஒதுக்கீடு கடந்த காலத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், போதைப்பொருள் கும்பல்கள் சமூகத்தை பாதிக்கின்றன என்றும் அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அரசியலில் நேர்மைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் எடுத்துக்காட்டாக இருந்தார் என்றும், அதற்கு நேர்மாறாக தி.மு.க. செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்தியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் தமிழக இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.
பேச்சின் முடிவில் “வந்தே மாதரம்” என பிரதமர் முழக்கமிட்டார்; கூட்டத்தில் இருந்தோரும் அதனை ஒத்துக் கூறினர்.
