தி.மு.க., ரவுடிகள் தாக்கியதாக தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் சூர்யா மீது நடந்த தாக்குதலுக்கு பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு சூர்யா பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்றபோது, அவரையும் உடன் வந்த பா.ஜ., நிர்வாகிகளையும் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர்களுக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாக்குதல் குறித்து சூர்யா கூறுகையில், விவாத நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகை குறித்து திமுக அரசை விமர்சித்தபோது, திமுக ஆதரவாளரான யூடியூபர் செந்தில்வேலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது, அமைச்சர் சேகர்பாபுவின் பெயரை சொல்லி 100-க்கும் மேற்பட்ட திமுக ரவுடிகள் வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
தாக்குதலின்போது சோடா பாட்டில், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தெரு விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சூர்யா கூறினார். போலீசார் தங்களை மீட்டதாகவும், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க., எம்.பி., இன்பதுரை ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். ஜனநாயக விவாதங்களுக்கு வன்முறையே பதிலாக மாறியுள்ளதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
