கோவை: தி.மு.க. ஆட்சிக் காலம் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதாக, பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த தெருமுனை தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.
காளப்பட்டி நேரு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்கள் நடுநிலையாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்லவே இத்தகைய பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன என்றார்.
மின் கட்டண உயர்வால் கோவையில் பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் ஏற்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்டு, தேவையான திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றார்.
மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெண்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த அவர், மாற்றம் தேவை என வலியுறுத்தினார்.
