தி.மு.க., ஆட்சி இல்லாத தமிழகம் வேண்டும் – பா.ஜ., தலைவர் நயினார் அறிவிப்பு
சென்னை:
தி.மு.க., இல்லாத தமிழகம் தான் தமிழக மக்களின் ஒரே கனவு என்றும், அந்த கனவு மிக விரைவில் நிறைவேறும் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகே, தற்போது மக்கள் கனவுகளை கேட்கும் நிலையில் முதல்வர் வந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக மக்களின் உண்மையான கனவுகள் என்ன என்பதை பட்டியலிட்ட அவர், சீரான சட்டம் – ஒழுங்கு நிலவும் தமிழகம், சாராயம் மற்றும் கஞ்சா இல்லாத தமிழகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழும் தமிழகம் என்பதே மக்களின் விருப்பம் என குறிப்பிட்டார்.
மேலும், தி.மு.க., வெற்று விளம்பரங்கள் இல்லாத தமிழகம், அரசு துறைகளில் ஊழல் இல்லாத நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தன்மானத்துடன் வாழும் சூழல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். துாய்மை பணியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் சிந்தாத தமிழகம் தான் மக்களின் கனவு என அவர் கூறினார்.
அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிச மனநிலை இல்லாத தமிழகம், விசாரணை கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படாத மாநிலம் வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கல்விக் கடன் தள்ளுபடி, தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காஸ் சிலிண்டர் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றாத அரசு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில், ஹிந்து மத வெறுப்பு இல்லாத, தி.மு.க., ஆட்சி இல்லாத தமிழகம் தான் தமிழக மக்களின் ஒரே கனவு என்றும், அந்த கனவு விரைவில் நிஜமாகும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
