திரையில் ஜனநாயகம் பேசுபவர்கள் இருக்கலாம்; தரையில் போராடுவது நான்தான்: சீமான் வேதனை
சென்னை:
திரையில் காட்டப்படும் ஜனநாயகத்தைப் பற்றி பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்; ஆனால் தரையில் நின்று உண்மையான ஜனநாயக அரசியலை செய்வதை யாரும் கவலைப்படுவதில்லை என சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய சீமான், தேர்தல் அரசியல் மற்றும் மக்கள் அரசியல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களும், விளம்பர அரசியலில் ஈடுபடுபவர்களும் கூட்டமாக நிற்பார்கள்; மக்களின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் நாங்கள் தனித்து நிற்போம் என்றார். கூட்டமாக நிற்பதற்கு வீரமும் துணிவும் தேவையில்லை; தனித்து நிற்பதற்கே உண்மையான துணிவு தேவை என்றும் கூறினார்.
அரசு வழங்கும் லேப்டாப்புகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவது விளம்பர அரசியல் என்றும், மாணவர்கள் கல்விக்காக முன்னதாகவே வழங்கப்பட்டிருந்தால் அது மக்கள் அரசியல் என்றும் சீமான் விமர்சித்தார். பொங்கலுக்கு ரூ.3,000 வழங்குவதும் தேர்தல் நெருங்கிய நேரத்தில் செய்யப்படும் அரசியல் நடவடிக்கையாகவே தெரிகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மழைநீர் தேங்காமல் சாலைகளை பராமரிப்பதே மக்கள் அரசியல்; வெள்ளத்தை உருவாக்கி நிவாரணம் வழங்குவது தேர்தல் அரசியல் எனவும் கூறினார். ரூ.3,000 வழங்குவதால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசு நிதி இழப்பதாகவும், அந்தத் தொகை இருந்தால் நாட்டை உலகின் முன்னணி நாடாக மாற்ற முடியும் என்றும் சீமான் தெரிவித்தார்.
திரைப்படங்களிலும் அரசியலிலும் இரட்டை நிலைப்பாடு இருப்பதாக விமர்சித்த சீமான், தன் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், எதிரான கருத்துகளைச் சொல்வோரின் குரல்வளை நசுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். “திரையில் இருக்கும் ஜனநாயகனைப் பற்றி பேசுகிறீர்கள்; தரையில் போராடும் இந்த ஜனநாயகனை யாரும் கவனிப்பதில்லை,” என அவர் கூறினார்.
