சென்னை: திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட மாடல் ஆட்சியின் கீழ் வள்ளலாரின் புகழைப் போற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வள்ளலார் பிறந்தநாளை ‘தனிப்பெரும் கருணை நாள்’ எனக் கொண்டாடுவதும், ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா நடத்துவதும், வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைப்பதும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலாரின் உயரிய கருத்துகளை அயல்நாட்டினரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்குடன், வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படுவதாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
