மதுரை:
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் மதுரை கலெக்டர் மன்னிப்பு கேட்டது, முதல்வர் கேட்டதாகவே பொருள். இதில் கலெக்டர், கமிஷனரை தமிழக அரசு பலிகடாவாக்கி விட்டது,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:
த.வெ.க. தலைவர் விஜயை இன்னும் நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது கட்சியில் உள்ளோர் தேவையில்லாமல் என்னை சீண்டுகின்றனர். தொடர்ந்து சீண்டினால், அவர்களுக்கு பதிலடி கடுமையாக இருக்கும்.
ஒரு செய்தி சேனல், செய்தியாளரை திமுக எம்.எல்.ஏ. ஒருவர் தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் நேரடியாக தலையிட்டு, அந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு உள்ளது என நம்ப முடியும். அந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வேண்டும்.
த.வெ.க. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் பேசியது, தொண்டர்களின் விசிலுக்காக மட்டுமே. அவரது பேச்சு சிந்திக்க வைப்பதாக இல்லை.
திருப்பரங்குன்றம் பிரச்னையில் நீதிமன்றத்தில் கலெக்டர் மன்னிப்பு கேட்டதை, முதல்வர் கேட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட விதமும், முதல்வர் ஸ்டாலின் கையாண்ட முறையும், மைனாரிட்டி அரசியலை நோக்கியதாகவே இருந்தது.
மைனாரிட்டிகளை தாஜா செய்து ஓட்டு வாங்கும் எண்ணத்துடனே கடைசி வரை இந்த பிரச்னை கையாளப்பட்டது. அதனால்தான், இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் வழியாக ‘சம்மட்டி அடி’ விழுந்துள்ளது. கலெக்டர், கமிஷனரை பலிகடா ஆக்கி விட்டனர். இதிலிருந்தே திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டது யார் என்பது மக்களுக்கு புரியும்.
டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கனிமொழி கூறியுள்ளதால், அவர் நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மூடுவோம் என்று கூறுபவர்கள், தேர்தல் முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அவர் ‘அன்னியன், ரெமோ, அம்பி’ போல மாறி மாறி பேசுகிறார்.
இந்தியாவில் பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் கடைசி இடத்தில் மதுரை உள்ளது. மதுரையை குப்பை நகரமாக மாற்றிவிட்டு, இன்று மத்திய பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசன் விமர்சிக்கிறார். ஆனால் குப்பைக்கு காரணம் திமுக என்று மட்டும் பேச மாட்டார்.
பாஜவில் தேர்தல் பொறுப்பாளர் என்பது கட்சியின் அமைப்பு வேலை. அதற்கு முழுமையாக நேரம் கொடுக்க வேண்டும். நான் இன்று அந்த நிலையில் இல்லை. ஆனால் அரசியலை பொறுத்தவரை பின்வாங்கப் போவதில்லை. என்னை விமர்சிக்கும் எஸ்.வி.சேகர் நாடகத்தில் நடித்தவர். இன்று அரசியல் பேசுகிறார். அவர் திமுகவுக்கு போக விரும்பினால் போகட்டும். ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் அவர் உள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
