திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அரசை கண்டித்து தீக்குளித்த முருக பக்தர் உயிரிழப்பு
மதுரை:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. அந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர், இந்த விவகாரத்தால் மன வேதனை அடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய அவர், மனைவி, மகன், மகள் ஆகியோருடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார். ஓய்வு நேரங்களில் சரக்கு வாகனம் மூலம் காய்கறி மற்றும் பழ விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இன்று (டிசம்பர் 18) மாலை சுமார் 4 மணியளவில், தனது சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் அமைந்துள்ள ஈ.வெ.ரா., சிலை அருகேயுள்ள, பயன்படுத்தப்படாத போலீஸ் பூத்தில் அவர் உள்ளே சென்று பூட்டிக்கொண்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அருகிலிருந்த பொதுமக்களும், அந்த வழியாக சென்ற துணைமேயர் நாகராஜனும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீபம் ஏற்றப்படாததால் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம், முருக பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல்
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முருக பக்தரான பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும், இத்தகைய வருந்தத்தக்க முடிவுகள் எப்போதும் எதற்காகவும் வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு மதுரை பாஜ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். பூர்ணசந்திரனின் ஆன்மா முருகனின் திருப்பாதங்களை அடைய வேண்டி பிரார்த்திப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
