திருப்பரங்குன்றம் வழக்கு; மலை மீது இருப்பது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளதாக கூறப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், அந்த கட்டமைப்பு தீபத்தூண் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், நேற்று ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். மனுதாரர்களான ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் ஆகியோரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் வாதிட்டனர்.
அரசு தரப்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் ராமன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதனை எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். தமிழக அரசு தர்கா நிர்வாகம் உள்ளிட்ட எந்த தரப்புக்கும் ஆதரவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என்றும், தர்கா நிர்வாகம் தனியாக மேல்முறையீடு செய்து வழக்கறிஞரை நியமித்து வாதங்களை முன்வைத்துள்ளதாகவும் கூறினார்.
1923ஆம் ஆண்டு சிவில் வழக்கில், அப்போது கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் திருப்பரங்குன்றம் மலையை ஆய்வு செய்து, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாகவும், வேறு எந்த வழிபாட்டு தலத்திற்குரிய கட்டமைப்பும் இல்லை என்றும் தீர்ப்பில் பதிவு செய்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், காலம் காலமாக தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு பதிலாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய வழக்கை, 2014ஆம் ஆண்டு தனி நீதிபதி வேணுகோபால் தள்ளுபடி செய்ததாகவும், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை 2017ஆம் ஆண்டு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு நிராகரித்ததாகவும் அரசு தரப்பு குறிப்பிட்டது.
1996ஆம் ஆண்டு தொடர்புடைய மற்றொரு வழக்கில், நீதிபதி கனகராஜ், மனுதாரர் அறநிலையத்துறை அதிகாரிகளை அணுக வேண்டும் என உத்தரவிட்டிருந்ததாகவும், 1923 முதல் 2025 வரை வெளியான பல நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் குறித்து எந்த குறிப்பிடும் இல்லை என்றும் அரசு தரப்பு வாதிட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவில் மலையின் பாதியில் அமைந்துள்ளதாகவும், அங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும் கூறிய அரசு தரப்பு, அந்த வழக்கமான நடைமுறையை ஒரே நாளில் மாற்ற முடியாது என்றது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், சூபி மரபின்படி தர்காவில் தீபம் ஏற்றப்படுகிற நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு மட்டும் ஆட்சேபனை தெரிவிக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட நூல்களில் குறிப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு இரு தரப்பினரிடையே விரிவான வாதங்கள் நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
