திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா, 2026 ஜனவரி 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 21-ஆம் தேதி மலை உச்சியில் மரத்தால் செய்யப்பட்ட கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கான ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக, திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சிவஜோதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் கோயில் உதவி ஆணையாளர் சசி பிரியா, தாசில்தார் கவிதா மற்றும் தர்கா நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2026 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ள சந்தனக்கூடு விழாவுக்கும், 2025 டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற ஊர்வலத்திற்கும், கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளையே இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
வழக்கமாக பயன்படுத்தப்படும் பாதைகளில் மட்டுமே ஊர்வலம் நடைபெற வேண்டும் என்றும், விழா நடைபெறும் போது எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தக் கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பது அனுமதிக்கப்படாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஏதேனும் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏற்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பும் தர்கா நிர்வாகத்தினருக்கே எனவும் தெரிவிக்கப்பட்டது.
