திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணியுடன் ஏற முயற்சி; கேரளாவை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் கோவில், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மலை மீது உள்ள தீபத்தூணில், இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கார்த்திகை தீப தினமான 3-ந் தேதி, அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காரணம் கூறி, மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, தமிழக அரசு மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வரும் 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இந்தச் சூழலில், இன்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர், திருப்பரங்குன்றம் மலைக்கு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டு ஏற முயன்றனர். பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தர்காவுக்குச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அவர்கள் மலையில் அமர்ந்து அசைவ உணவு உண்ணும் நோக்கில் உணவுகளை கொண்டு சென்றுள்ளனர்.
மலையடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வழக்கமான சோதனையின் போது வாலிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர். மலைக்கு அசைவ உணவுகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உணவுகளை மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
