திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண் – உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில்,
“இந்த தீபத்தூண் சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குரியது அல்ல. இரவில் தீபம் ஏற்றி அதன் வெளிச்சத்தில் அமர்ந்து சமணர்கள் விவாதிப்பர். எனவே, இந்த தூணில் ஹிந்துக்கள் உரிமை கோர முடியாது,” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் (தர்காவிலிருந்து 15 மீ. தொலைவில்) கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,” என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த டிசம்பர் 1ம் தேதி, “வழக்கமான இடங்களுடன் சேர்த்து தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்,” என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கோயில் செயல் அலுவலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என கோரினார். இதேபோல் கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்ப் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், “பாரம்பரிய வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்,” என மதுரை கனகவேல் பாண்டியன் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கனகவேல் பாண்டியன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, டிசம்பர் 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “நீதிமன்ற உத்தரவு மீண்டும் மீண்டும் மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய, தமிழக தலைமைச் செயலர் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டிசம்பர் 17ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும்,” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., மற்றும் போலீஸ் கமிஷனர் தரப்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தன.
விசாரணையில், கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம், ஜோதி ஆகியோரும், தர்கா நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் மற்றும் வழக்கறிஞர் பிரபுராஜதுரையும், கனகவேல் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராயும் ஆஜராயினர்.
கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிடுகையில், “கோயில் அறங்காவலர் குழுவை எதிர்மனுதாரராக சேர்க்காமல், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. கோயிலின் வழிபாட்டு முறைகள் மற்றும் அன்றாட நடைமுறைகளை கோயில் நிர்வாகமே தீர்மானிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஜோதி, “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூண் போன்ற கட்டமைப்புகள் சமணர்கள் காலத்திற்குரியது. அந்த தூண்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல,” என வாதிட்டார்.
தர்கா நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், “தர்கா தரப்புக்கு போதிய வாய்ப்பு வழங்காமல், அவசரமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம் தொடர வேண்டும்,” என தெரிவித்தார்.
வழக்கறிஞர் பிரபுராஜதுரை, “தீபத்தூண் மற்றும் தர்கா இடையேயான தூரம் 15 அடி மட்டுமே. ஆனால் தனி நீதிபதி அதை 50 மீ. என தவறாக குறிப்பிட்டுள்ளார்,” என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் இந்த வழக்கின் மேலான விசாரணையை இன்று (டிசம்பர் 16)க்கு ஒத்திவைத்தனர்.
