திருப்பரங்குன்றம் மலைக்கு 20 நாட்களுக்குப் பின்பு செல்ல அனுமதி; சந்தனக்கூடு விழாவிற்காகவே என பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலை மேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்கு பிறகு இன்று போலீசார் அனுமதி வழங்கினர். சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்களை மலைக்கு அனுமதிப்பதற்காகவே தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபம் ஏற்றப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், மேல் முறையீட்டு வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளன. கார்த்திகை தீப திருவிழாவுக்காக வழக்கம்போல் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகேயுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 2 முதல் திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடுதலாக ஆயிரம் போலீசார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மலைக்கு செல்லக்கூடிய பெரிய ரதவீதி, பழனி ஆண்டவர் கோயில் சந்திப்பு, மலை படிக்கட்டுகளுக்கு முன்பு உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு மற்றும் கோட்டை தெரு பகுதிகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டிசம்பர் 2 முதல் மலைக்கு செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. டிசம்பர் 3ஆம் தேதி 144 தடை உத்தரவும் அமலில் இருந்தது.
இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு மலையில் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்ய நான்கு இஸ்லாமியர்களை மலைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்கா நிர்வாகிகள் சந்தனக்கூடு விழாவிற்காக மலைக்கு கொடியை கொண்டு சென்றனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களை அனுமதித்துள்ள நிலையில், தங்களையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில், இன்று மதியம் 1.10 மணிமுதல் அனைவரும் மலைக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். பழனி ஆண்டவர் கோயில் தெரு – பெரிய ரதவீதி சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன.
பழனி ஆண்டவர் கோயில் தெரு மற்றும் கோட்டை தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 20 நாட்களாக யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், மெயின் ரோட்டில் இருந்து வீடுகளுக்கு செல்வதற்கே போலீசார் கடும் சிரமங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். நேற்று இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியேற்றம் நடந்ததாகவும், ஜனவரி 6ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதற்காகவே தற்போது அனைவருக்கும் மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். சந்தனக்கூடு திருவிழா இல்லையென்றால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்காது என்றும், ஜனவரி 7க்கு பிறகும் இந்த அனுமதி தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
