திருப்பரங்குன்றம் தர்கா விவகாரம்: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி, தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.
மதுரை மாணிக்கமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை ஜனவரி 2ஆம் தேதி விசாரித்த தனி நீதிபதி எஸ். ஸ்ரீமதி, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்தலாம் என்றும், விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், விலங்குகளை பலியிடக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஜனவரி 21க்கு ஒத்திவைத்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தர்கா மேலாண்மை அறங்காவலர் ஓசீர்கான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், சந்தனக்கூடு விழாவில் பொதுவாக அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்றும், மனுதாரர் கோராத நிலையில் 50 பேர் என்ற வரம்பை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த மேல்முறையீட்டு மனு நிலைக்கத்தக்கதா என்பதை தீர்மானிக்க, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மற்றொரு மேல்முறையீட்டு வழக்கில், தீபம் ஏற்றும் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து தீர்மானிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அந்த உத்தரவை மீறி, தனி நீதிபதி வேறு உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தனி நீதிபதி பிறப்பித்தது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், இறுதி விசாரணையின் போது மனுதாரர் தனது வாதங்களை தனி நீதிபதி முன் முன்வைக்கலாம் என்றும் கூறி, மேல்முறையீட்டு மனு ஏற்புடையதல்ல எனக் கூறி நிராகரித்தனர்.
