திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
தமிழகத்திற்கு வந்துள்ள அமித்ஷா, திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பாரம்பரிய உடையில் அமித்ஷா வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு முன், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய கோவில்களில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
கோவில்களுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அமித்ஷா கை குலுக்கினார். மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
