சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன. திமுகவின் தவறுகளுக்காக காங்கிரஸ் பழி சுமந்ததாக விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைத்தால் ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது தமிழகத்தில் நடைமுறைக்கு ஒத்து வராது என முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, மாணிக்கம் தாகூர் மற்றும் கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி திமுக மீது மீண்டும் விமர்சன கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி, பாஜவை எதிர்க்கும் தைரியம் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
மேலும், “நாங்கள் சொத்து, சுகத்தை கேட்கவில்லை; மரியாதை தான் கேட்கிறோம். திமுகவுடன் இருந்து அவர்கள் செய்த பல தவறுகளுக்காக பழியை சுமந்தோம். நாங்கள் கேட்பது அன்பும் மரியாதையும் தான்,” என தெரிவித்தார்.
திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலர் காங்கிரஸ் குறித்து தெரிவித்த கருத்துகள் வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார். “மரியாதை வழங்கப்படவில்லை என்றால் அதே மொழியில் பதிலளிப்போம்,” என்றும் எச்சரித்தார்.
மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் பெற வேண்டும் என்பதே இலக்கு என குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், அந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் உறுதியையும் வெளிப்படுத்தினார்.
இதேவேளை, பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்தில், மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பால் தேர்தல் வெற்றி உறுதி ஆகும் என நம்புவது மூடநம்பிக்கை என தெரிவித்தார்.
