திருச்சி: திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்தே பிற அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த வாரம் நான் பிறந்த நாள் கொண்டாடிய போது பல மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என் வயதை நம்ப முடியவில்லை என்றும் கூறினர். என்னை இளமையாக வைத்திருப்பதற்கான காரணம் உங்கள் அன்பு தான்.
தமிழகத்தின் முதல்வராக நான் உயர்ந்ததற்கு காரணம் நீங்கள் தான். உங்களால் உயர்ந்தேன்; உங்களால் வாழ்கிறேன். 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அமைச்சர் நேரு கூறியுள்ளார். இனிமேல் நாம் தீவிரமாக செயல்பட வேண்டும்.
‘ஸ்டாலின் தொடரட்டும்’ என்பது எனக்கான முழக்கம் அல்ல; திராவிடமும் திமுகவும் தொடர வேண்டும் என்பதற்கான முழக்கம். திமுகவின் 12வது மாநாடு இது. திருச்சி மாநாட்டில் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என அண்ணாதுரை முடிவு எடுத்தார். அது நடந்தது 70 ஆண்டுகளுக்கு முன்.
தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் மாநிலக் கட்சியை முதன்முறையாக ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணாதுரை. அவரது வழியில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சி செய்தார்.
பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு என் தலைமையில் திமுக ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. இனிமேல் ஏழாவது முறையிலேயே அல்ல; தொடர்ந்து திமுக ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே நாம் ஒன்று கூடியுள்ளோம்.
தமிழகம் நம்மை நம்பி உள்ளது; நாமும் தமிழகத்தை நம்பி இருக்கிறோம். திமுக ஆட்சி தொடர வேண்டுமெனில் நாம் அனைவரும் உழைக்க வேண்டும். கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த மாநாட்டில் நான் ஏழு இலக்குகளை அறிவித்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றை பல்வேறு திட்டங்களின் மூலம் நிறைவேற்றி உள்ளோம்.
தமிழகம் திமுக ஆட்சியில் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. செய்த திட்டங்களின் பட்டியல் மிகப்பெரியது. நமது திட்டங்களால் பயன் பெற்றவர்கள் ஓட்டளித்தாலே முழு வெற்றி பெற முடியும்.
விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். ஆனால் மற்ற அரசியல் கட்சிகள் கட்டங்களாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. நாம் செயல்படுத்திய திட்டங்களையே அவர்கள் காப்பியடித்து அறிவிக்கின்றனர்.
மத்திய பாஜ அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்ட நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட பலவற்றை வழங்கவில்லை. கோவை, திருச்சி, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
தமிழகத்திற்கு நன்மை செய்யாதவர்களே தற்போது நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். தமிழகத்திற்கு தொடர்ந்து மறுப்பு கூறும் என்டிஏ கூட்டணிக்கு மக்கள் ‘நோ’ சொல்லுவார்கள். தமிழகத்தில் அவர்களுக்கு ‘நோ என்ட்ரி’ தான்.
திமுக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல. மக்களின் உரிமைக்காக எப்போதும் களத்தில் இருக்கும் இயக்கம். தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றும் இயக்கம் திமுக.
ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை பாஜக தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. தமிழகம் எப்போதும் நம்முடன் தான் இருக்கும். எங்கள் மண்ணில் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்களே வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
