திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
அண்ணாமலை, போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழ் வழி மாணவர்களுக்கு செய்யப்பட்ட வெளிப்படையான அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடத்திய போலீஸ் எஸ்ஐ முதன்மைத் தேர்வின் கேள்வித்தாளில் தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டிருந்தது கடும் கண்டனத்துக்குரியது என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பொதுவாக, இந்த முதன்மைத் தேர்வில் பகுதி 1-ல் 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2-ல் 60 கேள்விகளும் இடம்பெறும் என்றும், இதில் மாணவர்களின் மொழி வாயிலான தகவல் பரிமாற்றத் திறனை மதிப்பீடு செய்ய 10 கேள்விகள் தமிழிலும், 10 கேள்விகள் ஆங்கிலத்திலும் இடம்பெறுவது வழக்கமான நடைமுறை என்றும் அவர் விளக்கினார். மீதமுள்ள 40 கேள்விகள் உளவியல் சார்ந்தவையாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த ஆண்டில் எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழ் கேள்விகள் அனைத்தும் நீக்கப்பட்டு, 10 ஆங்கிலக் கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்ட தேர்வு நடைமுறைகளையும், மாதிரி வினாத்தாளையும் மீறி, தேர்வு நாளில் திடீரென விதிகள் மாற்றப்பட்டிருப்பது, அரசுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே சிதைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் திமுக அரசு, சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழை புறக்கணித்ததன் மூலம் தனது போலி தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனால் தமிழ் வழி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக அரசு செய்துள்ள வெளிப்படையான அநீதி என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்தத் தேர்வில் அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
