திமுக ஆட்சிக்கு முடிவு; 210 இடங்களில் அதிமுக வெற்றி பெறும்: இபிஎஸ் அறிவிப்பு
மதுராந்தகம்:
விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலே திமுகவுக்கான கடைசி தேர்தலாக இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பிரதமர் மோடி இங்கு என்ன பேசப்போகிறார் என்பதை நாடு முழுவதும் மக்கள் எதிர்பார்த்து இருப்பதாக கூறினார். பிரதமர் இந்த மண்ணில் காலடி வைத்தவுடன் சூரியன் மறைந்தது போல உணர்வு ஏற்பட்டதாகவும், மக்கள் வெள்ளமாக மதுராந்தகம் சூழப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நியாயமா
நம்மை எதிர்ப்பவர்கள் எவ்வளவு வஞ்சகமான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும், சரியான அணியுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி என இபிஎஸ் கூறினார். அந்த வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கு துன்பமும் வேதனையும் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்துள்ளதாகவும், மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு குடும்பம் செழிக்க எட்டு கோடி குடும்பங்கள் சுரண்டப்படுவது நியாயமா எனவும் கேள்வி எழுப்பினார்.
கருணாநிதி குடும்பம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்துள்ளதாகவும், கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராகி ஊழலையே சாதனையாக கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். ஸ்டாலின் குடும்பம் இன்று உலகளவில் பணக்கார குடும்பமாக மாறியுள்ளதாகவும், அவருக்குப் பிறகு உதயநிதியை முதல்வராக மாற்ற விருப்பம் இருப்பதாகவும் கூறினார்.
பிரதமர் துணை
இனிமேல் திமுக எந்த பதவிக்கும் வர முடியாது என்றும், இந்த தேர்தலே அந்த கட்சிக்கான இறுதி தேர்தல் என்றும் இபிஎஸ் தெரிவித்தார். திமுகவை வீழ்த்துவோம் என்றும், பிரதமர் மோடி தங்களுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்றும், கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டார். குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இதுவாகும் என்றும், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு காணப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
பட்டியல்
அதிமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்ததாக இபிஎஸ் கூறினார். மத்திய அரசிடம் கேட்ட நிதி மற்றும் திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், அதிக பாலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கப்பட்டு, மத்திய அமைச்சர் நேரடியாக அடிக்கல் நாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் பல திட்டங்கள் கிடைத்ததாகவும், தற்போதைய ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்த்து ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
உலகத் தலைவர்கள் பாராட்டும் வகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என இபிஎஸ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அவர் தினகரனை சகோதரர் என குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
அதிர்ந்த அரங்கம்
இந்த கூட்டத்தில் இபிஎஸ் உரையாற்ற தொடங்கியபோது பிரதமர் மோடி முதல் பல்வேறு தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு வரவேற்றார். தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் கூறப்பட்டபோது அமைதியாக இருந்த தொண்டர்கள், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டதும் பெரும் ஆரவாரம் எழுந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு கூட்டத்தில் மீண்டும் அமைதி நிலவியது.
அனுமதிக்க மாட்டோம்
பாஜ தலைவர் அண்ணாமலை பேசுகையில், கொளுத்திய சூரியன் மறைந்தது மாற்றத்தின் அடையாளம் என கூறினார். இது மாற்றத்திற்கான கூட்டம் என்றும், மழையால் தாமரை இலை மலர்வது போல இந்த கூட்டம் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும், திமுகவுக்கு செல்லும் ஒவ்வொரு வாக்கும் தீய சக்திக்கு செல்லும் வாக்காகும்; அதனை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
சூரியன் இல்லை
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதை மைந்தன் மோடி வந்துள்ளதாக கூறினார். மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் மோடி என்றும், தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியவர் பிரதமர் என்றும் தெரிவித்தார்.
மோடி தமிழகத்திற்கு வந்ததும் சூரியன் மறைந்தது போல இன்றைய அரசியல் சூழல் மாறியுள்ளதாகவும், உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதையே திமுக நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பூஜ்ஜிய ஆட்சி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று தொடக்கம் என கூறினார். திமுக அரசு ஊழல், கொடுங்கோல், பெண்களுக்கு எதிரான, போதைப்பொருள் ஆட்சி என்றும், இது ஒரு பூஜ்ஜிய அரசு என்றும் விமர்சித்தார்.
மணல் கொள்ளை, நகராட்சி துறை, டாஸ்மாக், நெல் கொள்முதல் உள்ளிட்ட பல துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், மொத்தமாக 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசினால் பொய்கள் மட்டுமே வெளிவருவதாகவும், தோல்வியடைந்த அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்றும் அவர் கூறினார். கிராமங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களால் இளைஞர்கள் நாசமாகி வருவதாகவும், பெண்கள் மற்றும் தாய்மார்கள் திமுகவை மன்னிக்கக் கூடாது என்றும் அன்புமணி தெரிவித்தார்.
