திமுக அரசுக்கு கோர்ட் சம்மட்டி அடி – நயினார்
சென்னை:
சம கல்வி உரிமையை பறிக்கும் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை வழங்கியுள்ளதாக, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், “தமிழக மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம்; மொழி தொடர்பான பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம்” என உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், சம கல்வி உரிமையை மறுக்கும் திமுக அரசின் அணுகுமுறைக்கு நீதிமன்றம் தெளிவான பதிலடி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கிராமப்புறங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, இலவச உண்டு-உறைவிட வசதியுடன் தரமான கல்வி வழங்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை, அரசியல் காரணங்களால் தமிழகத்தில் அனுமதிக்க மறுக்கும் திமுக அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் செயல்படும் 650க்கும் மேற்பட்ட நவோதயா பள்ளிகள் மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில், மொழியை காரணமாக காட்டி தமிழக மாணவர்களை அந்த வாய்ப்பில் இருந்து விலக்குவது முறையல்ல என நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் பல பள்ளிகள் உள்ளபோது, கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்காக கூடுதல் பள்ளிகள் அமைப்பதில் என்ன தவறு என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாகவும், கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கும் போது முன்னேற்றமும் அதிகரிக்கும் என நீதிமன்றம் எடுத்துரைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுவரை ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்ததற்கான நிவாரணமாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் அமைக்க தேவையான நிலங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக அரசு இந்த உத்தரவையும் பின்பற்றாமல் இருந்தாலும், அடுத்ததாக அமையவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டு, கல்வித் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் சிறந்து விளங்கச் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
