சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அரசியலில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சென்னை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாம்தமிழர் கட்சி இதுவரை நான்கு முறை தேர்தலை சந்தித்துள்ளது. தோல்வி ஏற்பட்டாலும் ஐந்தாவது முறையாகவும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளோம் என்றார்.
தமிழக மக்கள் அடிமை மனப்பான்மையுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இங்கு அரசியல் என்பது இலவசங்களையும் பணப் பரிவர்த்தனைகளையும் மையமாகக் கொண்டு நடைபெறுகிறது என்றும் விமர்சித்தார்.
ஒரு நாட்டின் அரசியல் தலைவரை தேர்வு செய்வதில் ஜாதி, மதம், பணம் மற்றும் சாராயம் போன்றவை முக்கிய பங்காற்றினால் அது உண்மையான அரசியல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் தேர்தல் நேரத்தில் ரூ.2000 பணம் வழங்கப்பட்டதாகவும், சில தெருக்களில் அந்த தொகை கிடைக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பும் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 1.31 கோடி பெண்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திமுக மற்றும் பாஜக இரண்டும் கூட்டாக செயல்படும் கட்சிகள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் மையமான அரசியல் இங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் ஆட்சிக்கு வந்தால் பூஜ்ஜியத்திலிருந்து புதிய ஆட்சி அமைப்பை உருவாக்குவோம் என்றும், தூய தமிழர் நாடு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி அமைப்பது மற்ற கட்சிகளுக்கான அரசியல் அவசியமாக இருக்கலாம் என்றும், ஆனால் நாம்தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக மற்றும் அதிமுக இரண்டும் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாஜக வரக்கூடாது என்று கூறுபவர்கள் காங்கிரஸ் வரலாமா என்று கேள்வி எழுப்புகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தின் கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் உரிமை, கருணை, குருணைத் தொகை போன்ற திட்டங்கள் குறித்து பேசுவதற்குப் பதிலாக ஆட்சி முறையே மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோரின் தொகுதிகளில் பணம் வழங்காமல் தேர்தலில் ஓட்டு கேட்டு பார்க்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.
அவர்களது வீட்டிலேயே பணம் பெறாமல் ஓட்டு போடுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அநீதியும் அக்கிரமங்களும் அதிகரிக்கும் போது மக்கள் மாற்றத்தை நாடுவார்கள் என்றும், அந்த நேரத்தில் மக்கள் தங்களை தேடி வருவார்கள் என்றும் சீமான் கூறினார்.
