புதுடில்லி: திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியால் தமிழக மக்கள் கடும் சோர்வடைந்து உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, இந்த கூட்டணி குறித்து அமித் ஷா தமிழில் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “வளமான தமிழகம் – வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி” என்ற வாசகத்துடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுகவின் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களை எட்டும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியுடன் செயல்படும் என்றும், அந்த பாதையில் மக்களின் ஆதரவு பெருகும் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
