மதுரை: “தவெகவும், விஜய்யும் கட்சியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால், என் பதிலும் மிகக் கடுமையாக இருக்கும்,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
பதிலடி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
நான் இன்னும் தவெகவையும், விஜயையும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அடிக்க ஆரம்பிப்பேன். ஆனால் இன்னும் தொடங்கவில்லை. தமிழக அரசியலில் பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் கிடையாது. விஜய் அரசியலுக்கு வந்த முதல் நாளில் சொன்ன அதே கருத்தை தான் இன்று வரை சொல்லி வருகிறேன். புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக நான் மாற்றிப் பேசமாட்டேன். அவர் பாதையில் அவர் போகட்டும். அதே நேரத்தில் ‘டப்பா இன்ஜின்’ என அவர் சொன்னதற்கான பதிலடியை நான் கொடுத்துவிட்டேன்.
நாகரிகமான அரசியல்
ஆனால், தவெகவும், விஜய்யும் கட்சியில் உள்ள அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தால், என் பதிலும் மிகக் கடுமையாக இருக்கும். எந்த அளவுக்கும் கீழே இறங்கி பேசுவேன். விஜய் மேலேயும் நான் போவேன். அது வேண்டாம். ‘நாகரிகமான அரசியல்’ என விஜய் சொன்னதால், என் பதிலும் இன்று நாகரிகமாக இருக்கிறது.
2வது, 3வது கட்ட ஆட்கள், நான்கு கட்சி மாறி வந்தவர்களை வைத்து எந்தளவுக்கும் கீழே இறங்கி பேச வேண்டும் என்றால், அதே தவெகவுக்கும், அதே விஜய்க்கும், அதே பாணியில், அதைவிட சிறப்பாக பதில் சொல்ல எனக்கு தெரியும். ஆனால் வேண்டாம் என நினைக்கிறேன்.
எச்சரிக்கை
அரசியல் களம் நாகரிகமாக இருக்கட்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். மக்கள் முன்பு அவர் கருத்துகளை வைக்கட்டும். மின்னணு ஓட்டு இயந்திரத்தில், வாக்காளர்கள் தலைவர்கள் சொல்வதை கேட்டுத் தீர்மானிப்பார்கள். காத்திருப்போம். தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உழைத்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளட்டும்.
திமுகவினர் தான்
சட்டத்திற்கு புறம்பான கல்குவாரியில் படம் பிடித்த நிருபரை தாக்கியதில் மவுனம் காத்தவர்கள் இன்று பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு போட ஒரு கும்பலை கிளப்பியுள்ளனர். இதில் முதல்வர் நேரில் தலையிட வேண்டும். அவரது கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது என நம்ப முடியும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியது திமுகவினர் தான்.
ஒன்று திமுகவினர் கஞ்சா விற்று மாட்டுகிறார்கள், இல்லையெனில் எம்எல்ஏக்கள் நிருபர்களை தாக்குகிறார்கள். சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்தில் இருப்பதை காட்ட இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
உடனடியாக வழக்கு பதிவு செய்து எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும். ஒன்றும் செய்யாமல் கரூர் காவல்துறையை உப்புக்கு சப்பாணியாக வைத்து, நிருபரை குற்றவாளியாக கட்டமைப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தது என்பது, தமிழக அரசும் முதல்வரும் கொடுத்த மன்னிப்பாகவே பார்க்க வேண்டும். மாவட்டத்தில் அரசு என்றால் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், கமிஷனர். அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கிறார்கள் என்றால், விஷயம் எவ்வளவு தீவிரமாக போயுள்ளது என்பதற்கான சாட்சி அது.
சிறுபான்மையினரை ஓட்டு வங்கி அரசியலுக்காக தாஜா செய்ய பிரச்சனையை பெரிதாக்கி, இந்த நிலைக்கு முதல்வர் கொண்டு வந்துள்ளார். இதில் கலெக்டர், கமிஷனர் பலிகடாவாக மாற்றப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் அழிந்தது
பல ஆண்டுகளாக தமிழகம் காங்கிரஸ் மாநிலமாக இருந்தது. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் டில்லியை எதிர்பார்த்து அரசியல் செய்ததாலேயே காங்கிரஸ் அழிந்தது.
1977ல் காமராஜரை தோற்கடிக்க திமுகவுடன் கூட்டணி வைத்த நாளிலேயே காங்கிரஸ் வீழ்ச்சி தொடங்கியது.
2011ல் 63 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, அதன் பிறகு 40, பின்னர் 25 தொகுதிகளுக்கு வந்துவிட்டது. 60ல் நின்ற கட்சி, 10 ஆண்டுகளில் 25 ஆக சுருங்கி விட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
