தவறான பாதையில் ரஷ்யா… அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு எஸ்தோனியா கோரிக்கை
தாலின்:
உக்ரைன் தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா தவறான திசையில் பயணித்து வருவதை இந்தியா தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என, எஸ்தோனியா அரசு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வரும் நிலையில், உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் தொடர்ந்து உறுதியாக உள்ளார். போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை.
இந்த சூழலில், உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என, ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கஸ் சாக்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா நீண்ட காலமாக வலுவான பொருளாதார உறவுகளை கொண்ட ஒரு முக்கிய நாடு என்றும், அந்த நிலையில் ரஷ்யா மீது தேவையான அழுத்தத்தை இந்தியா செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார். உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவும், ஐநா அரசியல் சாசனங்களை மீறியும் ரஷ்யா செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவின் இந்த அணுகுமுறை தவறானது என்பதை பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்கள் உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல முடியும் என்றும், அதற்கான வாய்ப்புகள் இந்தியாவிடம் அதிகமாக உள்ளன என்றும் அவர் கூறினார். இதன் மூலம் உக்ரைன்–ரஷ்யா போரை நிறுத்துவதில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்க முடியும் எனவும் மார்கஸ் சாக்னா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைனைப் போலவே எஸ்தோனியாவும் முன்னதாக சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 நாடுகளில் ஒன்றாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாடு ஐரோப்பாவின் பால்டிக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
