சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை குடும்பத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் பொது நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் வழக்கில், அந்த நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி.கருணாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு மற்றும் நாராயணபுரம் போன்ற கிராமங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பள்ளி, கல்லூரிகள் கட்டியுள்ளனர்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம் மற்றும் செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
அதிமுக எம்.பி. தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள் செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக உள்ளனர்.
வருவாய் ஆவணங்களில் நீர்ப்பிடிப்பு நிலம் மற்றும் கல்லாங்குத்து நிலம் என வகைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு மாணவர்களுக்கான விடுதிகள், பயிற்சி மையங்கள், துணை மின் நிலையம் மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கான தனி சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
2001ஆம் ஆண்டு முதல் இந்த பொது நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பிப்ரவரி 10ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சர்வே அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கலெக்டர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
