தமிழ் வளர்ச்சிக்கான விருதுகள் அறிவிப்பு: துரைமுருகனுக்கு அண்ணா விருது
சென்னை: 2025ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகன்க்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழுக்கும் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான காமராசர் விருது, பாரதிதாசன் விருது, திருவிக விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட உள்ளது. அம்பேத்கர் விருது விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்படுகிறது. காமராஜர் விருது எஸ்.எம். இதயத்துல்லாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும் வழங்கப்படுகிறது.
திருவிக விருது முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு வழங்கப்பட உள்ளது. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் செல்லப்பாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனாருக்கும், கலைஞர் விருது எழுத்தாளர் விடுதலை விரும்பிக்கும் வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ் மற்றும் படைப்புத்தமிழ் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மரபுத்தமிழ் பிரிவில் இலக்கியச்சுடர் த. ராமலிங்கம் (வயது 68), ஆய்வுத்தமிழ் பிரிவில் எழுத்தாளர் சி. மகேந்திரன் (வயது 73), படைப்புத்தமிழ் பிரிவில் நரேந்திர குமார் (வயது 74) ஆகியோர் இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கிய மாமணி விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படும். இந்த அனைத்து விருதுகளையும், திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
