சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில், சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 328 உதவிப் பேராசிரியர்கள் நிதிநிலை காரணம் கூறி கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் இல்லாததால், தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வகுப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில், இன்று முதல் உள் தேர்வுகள் தொடங்கப்படுவது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புகள் இன்றி மாணவர்களை தேர்வு எழுதச் செய்வது கல்வி முறைக்கே அவமானம். தமிழ் பாடத்துக்கே ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது, தமிழை வளர்க்கும் அரசின் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்குகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 45.44% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணியாற்றுவோரைக் பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தும், அவர்களைப் பணி நீக்கம் செய்ததோடு புதிய நியமனங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை என கூறிய அரசு, இந்தாண்டு பட்ஜெட்டில் அண்ணா பல்கலைக்கழக தரம் உயர்த்த ரூ.1,380 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது முரண்பாடாக உள்ளது.
உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட 328 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து, வகுப்புகளை மீண்டும் தொடங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
